Thursday, March 15, 2012

1. 'இதுதாண்டா' பைத்தியம்

ஏதோ என்னைச் சுட்டிக்காட்டி நாலு பேர் பேசிக் கொள்வதையே இந்தக் கட்டுரையின் தலைப்பாக வைத்து விட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் .தமிழ்நாட்டில் பலருக்கும் இப்போது*  பிடித்திருக்கும் வியாதியின் பெயர்தான் இது.

என்னதான் சோமாறி, பேமானி போன்ற பல வார்த்தைகளை உருவாக்கியவர்கள் என்ற போதிலும், பொதுவாக நாம் மரியாதை தெரிந்தவர்கள்தான். ஆனால், எந்த வேளையில், இந்த 'இதுதாண்டா போலிஸ்' படம் வெளியாகி, இந்த 'இதுதாண்டா' பைத்தியம் நம்மைப் பற்றியதோ, அப்போதே நமது மரியாதை காட்டும் பண்பும், 'இதுதானாடா மரியாதை?' என்று மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு வந்து விட்டது.

என் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மநாபன் (நான் முன்பு பல ஜன்மங்களில் தொடர்ந்து செய்த பாவங்களுக்கும், பத்மநாபன் என் பக்கத்து வீட்டுக்காரராக அமைந்ததற்கும் உள்ள தொடர்பு பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.'  இதைப்பற்றி 'இதுதாண்டா பூர்வ ஜன்ம பலன்' என்கிற வேறொரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்) பற்றி முதலில் குறிப்பிட வேண்டும்.

மகாராஜராஜஸ்ரீ உயர்திரு மிஸ்டர் பத்மநாபன்காருஜி அவர்கள் பொதுவாகவே மற்றவர்களிடமிருந்து அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவர். (அவர் மற்றவர்களிடமிருந்து எதிபார்ப்பதையெல்லாம், மற்றவர்கள் அவரிடம் எதிர்பார்த்து ஏமாந்தால், அதற்கு அவர் பொறுப்பல்ல!) ஒருமுறை அவரை நான் 'என்ன சார்?' என்று விளித்ததற்காக, நான் மரியாதை கற்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி எனக்கு ஒரு நீண்ட வகுப்பே எடுத்தார். வகுப்பு முடிந்ததும், நான் எந்த விதத்தில் மரியாதை தவறி நடந்து கொண்டு விட்டேன் என்று நான் கேட்ட சந்தேகத்திற்கு அவர் அளித்த விளக்கம்: நான் 'என்னங்க சார்' என்று சொல்லியிருக்க வேண்டுமாம். 'சரிங்க சார்' என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். வேறு என்னங்க சார் செய்வது?

பத்மநாபன் இப்படி என்றால், என் மூன்று வயதுப் பையன் மரியாதைகள் அற்ற சமுதாய அமைப்பை நிறுவும் லட்சியம் கொண்டவன்! இந்தச் சிந்தனை வேறுபாட்டினால் இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான கருத்து மோதல்கள் ஏற்படுவது உண்டு. இறுதியில், என் குமாரன், 'போடா  முட்டாள்' என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது வழக்கம்!

பத்மநாபன் பலமுறை என்னிடம் குறைப்பட்டுக்கொண்டதன் பேரில், என் பையனுக்கு சுமார் ஆறு மாதங்கள் மரியாதைக்கலையில் டிப்ளமா பெறுமளவுக்குப் பயிற்சி அளித்த பிறகு, பெருமையுடனும் (தைரியத்துடனும்) அவனை பத்மநாபனிடம் அழைத்துச் சென்றேன்.


வசிஷ்டர் முன்பு நின்ற விஸ்வாமித்திரர் போல ப.வீ.ப வின் முன்பு பணிவாக நின்ற என் பையன், 'குட் மார்னிங் அங்க்கிள்' என்றான். பத்மநாபனின் முகம் மழைக்காலத்தில் மலரும் தாமரை போல் மலர்ந்தது. (மழைக்காலத்தில் சூரியன் எப்போதாவதுதான் தலை காட்டும் , ஆதலால், தாமரையும் எப்போதாவதுதான் மலரும் என்று இந்த உவமைக்குப் பொருள் கொள்க!)
'பரவாயில்லையே!' என்றார் ப.வீ.ப. ('அங்க்கிள்ஜி    என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்திருப்பார்!)

தொடர்ந்து, என் பையன், "சாப்பிட்டீங்களா?" என்றான்.
"அடே!"
"எங்க வீட்டுக்கு வாங்க."
"என்னடா இது?" என்றார் ப.வீ.ப. நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், என்னைப் பார்த்து. (இதனால், 'என்னடா இது?' என்று அவர் என்னை விளித்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பத்மநாபன் மரியாதை தெரிந்தவர்!)

அப்போதுதான், இரண்டாவது முறையாக அந்த அணுகுண்டு விழுந்தது. (முதல் முறை விழுந்தது ஹிரோஷிமாவில் என்று கேள்வி.)

"இதுதாண்டா  மரியாதை!"  என்றான் என் பையன்.

இப்போது பத்மநாபன் என் பக்கத்து வீட்டில் இல்லை. வீடு மாற்றிக் கொண்டு போய் விட்டார். (என் பூர்வ ஜன்மப் பலனில் முதல் பாகம் முற்றியது!)

இந்த 'இதுதாண்டா' பைத்தியம் என் பையனுக்கு மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைச் சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'இதுதாண்டா' என்று சொல்லிக் கொண்டிருப்பதால்தான் நான் இது பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஒருநாள் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்கப் போயிருந்தேன். ஒரு கூடைக்காரியிடம் வெண்டைக்காய் வாங்கப் போனால், பக்கத்தில் இருந்த இன்னொரு கூடைக்காரி, "இதுதாண்டா பிஞ்சு வெண்டை" என்றாள். அன்று என் வீட்டில் சுட்ட அப்பளம்தான்!

கோவிலுக்குப் போனால், அர்ச்சகர் தீபாராதனை காட்டிக் கொண்டே, "இதுதாண்டா முருகன்" என்றார்.

ஆஃபீசில் சம்பளம் வாங்கும்போது காஷியர் சம்பளக் கவரைக் கையில் கொடுத்து, "இதுதாண்டா சம்பளம்" என்கிறார்.

ஒருமுறை கடற்கரைக்குப் போனபோது, படகு மறைவில் உட்கார்ந்திருந்த ஒரு காதல் ஜோடி என் கண்ணில் பட்டு விட்டார்கள். வெட்கப்படுவார்களோ, பயந்து அலறுவார்களோ என்று நான் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தபோது, காதலன் என் முன்னே வந்து, "இதுதாண்டா காதல்" என்றானே பார்க்க வேண்டும்!

இப்படியே போனால், இந்த 'இதுதாண்டா' பைத்தியம் முற்றிப் போய் மரியாதை என்பதே நமக்கு மறந்து போய் விடும்.

எனவே, 'இதுதாண்டா' என்ற வார்த்தைக்கு அரசாங்கம் உடனே தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தடை உடனே விதிக்கப்படா விட்டால் என்ன ஆகும் என்று சொல்லி விடுகிறேன். சட்டம் வரத் தாமதமானால் அதற்குள் எல்லோருக்கும் இந்த 'இதுதாண்டா' போடாமல் பேசவே வராது என்று ஆகி விடும். சட்டம் தாமதமாக வந்தால், சட்டம் வந்த பிறகும் பழக்கத்தை விட முடியாமல் பலரும் 'இதுதாண்டா' போட்டே பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனாலும் சட்டம் சட்டம்தானே? 'இதுதாண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்  என்று வைத்துக் கொள்வோம்.

மாஜிஸ்திரேட் கேட்கிறார்: "தடை செய்யப்பட வார்த்தையைப் பயன்படுத்தினீர்களா?"

"ஆமாம்."

"ஐநூறு ரூபாய் அபராதம்!"

"ஐநூறு ரூபாயா? அக்கிரமமாக இருக்கிறதே?"

"இதுதாண்டா சட்டம்" என்று பழக்க தோஷத்தில்  சொல்லி விட்டு, மாஜிஸ்திரேட் நாக்கைக் கடித்துக் கொள்கிறார். அப்புறம், மாஜிஸ்திரேட்டுக்கு யார் அபராதம் விதிப்பது?

இந்தக் கட்டுரையை என் நண்பரான ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் காட்டினேன். படித்துப் பார்த்து விட்டு "என்னய்யா, ஸில்லியாக இருக்கிறதே!" என்றார்.

"இதுதாண்டா நகைச்சுவை" என்றேன்.

பளார் என்று ஒரு அறை விட்டார்.

"என்ன சார் இது?' என்றேன் கோபத்துடன்.

"இதுதாண்டா சன்மானம்" என்றார்.

"இதுதாண்டா உலகம்" என்று சொல்ல நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

(* 'இதுதாண்டா போலிஸ்' என்ற திரைப்படம் வெளியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது) 

No comments:

Post a Comment