Saturday, January 23, 2016

8. சென்சார் - சாரி சார்!

படம் எடுத்து முடிந்ததும் சென்சார் பல அட்சேபணைகளைச் சொல்வதால் சில காட்சிகளை வெட்டி மீண்டும் எடுக்க வேண்டியிருக்கிறது. இதைத் தவிர்க்க, படம் எடுக்கும்போதே சென்சார் போர்டு உறுப்பினர் ஓருவர் கூடவே  இருந்து பார்த்து, காட்சிகளை அப்ரூவ் செய்யும் முறையைக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்? ஒரு கற்பனை!

டைரக்டர் (ஒரு கவர்ச்சியான உடையை சென்சார் அதிகாரியிடம் காட்டி): சார்! இந்த உடையைப் போட்டுக்கிட்டு ஹீரோயின் நடிக்கலாமா? இல்லை ஆபாசம்பீங்களா?
சென்சார்: முதல்ல ஹீரோயினை இந்த டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு வரச் சொல்லுங்க. பாத்துட்டு அப்புறம்தான் சொல்ல முடியும்!

சென்சார்: ஹீரோ குடிக்கிற மாதிரி காட்சி எடுக்கிறதை ஆட்சேபிக்கிறேன்!
டைரக்டர்: சார்! இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கவேயில்லை! குடிச்சாத்தான் இவருக்கு நடிக்க  மூடே வரும்!

சென்சார்: ஹீரோ வில்லன் வயத்தில உதைக்கிற காட்சியை அனுமதிக்க முடியாது. முதுகில உதைக்கிற மாதிரி எடுங்க.
வில்லன் நடிகர்: சார்! இப்பதான் வயத்தில உதை  வாங்கினேன். முதுகில வேற உதை வாங்கிக்கச் சொல்றீங்களே!

தயாரிப்பாளர்: இன்னிக்கு ஷூட்டிங் கான்சல். கால்ஷீட் கிடைக்கலே.
டைரக்டர்: யாரோட கால்ஷீட், ஹீரோவுதா , ஹீரோயினுடையதா?
தயாரிப்பாளர்: அவங்க கால்ஷீட் எல்லாம் கிடைச்சுடுச்சு. சென்சார் அதிகாரியால இன்னிக்கு வர முடியாதாம்!

"சென்சார் அதிகாரியோட நிறைய பெண்கள் வந்திருக்காங்களே, எதுக்கு?"
"இன்னிக்கு எடுக்கற காட்சியைப் பத்தித் தாய்க்குலத்தோட அபிப்பிராயம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கறதுக்காகத் தன் மனைவி, மைத்துனிகள், சகோதரிகள், ஒன்று விட்ட சகோதரிகள் எல்லாரையும் அழைச்சுக்கிட்டு வந்திருக்காரு!"

"இந்த மாதிரி பாத்ரூம்ல குளிக்கிற காட்சியை எல்லாம் அனுமதிக்க முடியாது. குத்தாலம் அருவியில குளிக்கிற மாதிரி எடுத்தீங்கன்னா அனுமதிக்கலாம். நானும் குத்தாலம் போனதில்லை."

"ஷூட்டிங்குக்கு நேரமாச்சு. எங்கேய்யா சென்சாரைக் காணோம்?"
"பக்கத்து ஃப்ளோர்ல கவர்ச்சி நடனக் காட்சியைப் படமாக்கறாங்களாம். அதைப்  பார்த்துட்டு வரேன்னுட்டுப் போயிருக்காரு."

நெருக்கமான காதல் காட்சியை சென்சார் அதிகாரியும் அவர் மனைவியும் பார்க்கிறார்கள்.
மனைவி: பாருங்க ஹீரோ எப்படிக் கொஞ்சறாருன்னு! உங்களுக்குத்தான் இப்படியெல்லாம் கொஞ்சத்  தெரியாது. ஏதாவது ஆட்சேபணை  சொல்லி இந்தக் காட்சியைக் கெடுக்காமயாவது இருங்க!

சென்சார்: கட் கட்! ஹீரோவும் ஹீரோயினும் இவ்வளவு நெருக்கமா இருக்கக் கூடாது. கொஞ்சம் தள்ளி நில்லுங்க!
டைரக்டர் (தயாரிப்பாளரிடம்): சார்! இங்க நான் டைரக்டரா, அவர் டைரக்டரா? அவரை வச்சே படத்தை எடுத்துக்கங்க. நான் போறேன்!

"இவர் யாரு புது டைரக்டரா?"
"சென்சார் அதிகாரியா இருந்தவரு. ஷூட்டிங்கைப் பாத்து அவருக்கே டைரக்டர்  ஆகணும்னு  ஆசை வந்து வேலையை விட்டுட்டு டைரக்டர் ஆயிட்டாரு!

டைரக்டர் (கவர்ச்சி நடிகையிடம்): நீ சென்சார் கிட்டக் கொஞ்சம் பேசி அவர் கவனத்தைத் திருப்பு. நான் அதுக்குள்ளே விஸ்வாமித்திரரை மயக்க மேனகா ஆடற  கவர்ச்சி நடனத்தைப் படம் புடிச்சுடறேன்!

தயாரிப்பாளர்: படப்பிடிப்புதான் முடிஞ்சு போச்சே, இன்னும் ஏன் சென்சார் அதிகாரி தகறாறு பண்றாரு?
டைரக்டர்: அவர் பெயரையும் டைட்டில்ல போடணுமாம்!

தயாரிப்பாளர்: ஷூட்டிங் கான்சலா ஏன்?
டைரக்டர்: நான் எடுத்த ஒரு காட்சியை சென்சார் ஆட்சேபிச்சாரு. நான் அதே காட்சி இந்திப்படத்தில வந்திருக்குன்னு சொன்னேன். அந்த இந்திப் படத்தைப் பார்த்துட்டுன்னு வரேன்னு சொல்லி தயாரிப்பாளர் செலவில ஃபிளைட்டில   பம்பாய்க்குப் போயிருக்காரு.

"இந்த சென்சார் அதிகாரி சட்டசபையில சபாநாயகரா இருந்திருப்பாரு போல இருக்கு?"
"எப்படிச் சொல்றீங்க?'
"இந்தக் காட்சியைத் திரைக் குறிப்பிலேருந்து நீக்கறேன்னு சொல்றாரே!

சென்சார்: என்ன இது ஹீரோயின் டாப்லெஸ்ஸா இருக்காங்க?
டைரக்டர்: சார், அவங்க வெயிலுக்காக இப்படி இருக்காங்க. டேக் எடுக்கும்போது சரியா உடை  உடுத்திப்பாங்க.

சென்சார்: இந்த முத்தக் காட்சியை அனுமதிக்க முடியாது!
டைரக்டர்: சார், ஷூட்டிங்கில முத்தக்காட்சி எதுவும் கிடையாது. அவங்க காதலர்கள் என்பதால் ரிகர்சல்ல முத்தம் கொடுத்துக்கிட்டாங்க!

சென்சார்: இப்பதான் காசிக்குப் போயிட்டு வந்தேன். இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு! என் தலை எழுத்து!

சென்சார்: சில சென்சார் அதிகாரிகளுக்கு   நெருக்கமான காதல் சீன் எல்லாம் இருக்கற படங்கள் கிடைக்குது. எனக்கு மட்டும் புராணப்படம், குடும்பப்படம் இது மாதிரிதான் கிடைக்குது! எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் போல இருக்கு!.


7. வினாடி வினா - விபரீத பதில்!

வினாக்கள்
1) கிணறு வெட்டினால் பூதம் வருகிறது. என்ன செய்வீர்கள்?

2) தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது ஏன்?

3) கர்ணன் தருமனுக்கு மூத்த சகோதரன் என்றாலும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவன் இல்லை. ஏன்?

4) சிவாஜி கணேசன் என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?

5) காமராஜருக்கும் எம்.ஏ. படிக்கும் மாணவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

6) 32 மாத்திரைகளை வேளைக்குப் பாதி வீதம் சாப்பிட்டு வந்தால் எத்தனை வேளைக்கு வரும்?

7) தமிழ் மொழியின் பாட்டன் யார்?

8) தண்டிக்கப்படாமலேயே சிறைச்சாலையில் இருப்பவர் யார்?

9) உங்கள் நண்பருக்கு ஃபோன் போட்டால் லைனில் கடவுள் வருகிறார். என்ன செய்வீர்கள்?

10) சர்க்கஸில் கம்பி மேல் நடப்பவர் சொந்தத் தொழில் செய்ய நினைத்தால் எந்தத் தொழில் செய்வார்?

11) மணிவண்ணனை விட பாலசந்தர் அதிக வெற்றி அடைந்த டைரக்டர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

12) ஒரு வக்கீல் தையற்காரரிடம் தனக்கு சூட் தைக்கச் சொல்லி இருந்தார். தையற்காரர் சரியாகத் தைக்காமல் கெடுத்து விட்டால், வக்கீல் என்ன செய்வார்?

13) மார்ச் மாதத்தில் நாம் எதை நோக்கி மார்ச் செய்கிறோம்?

14) பாரதியார் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வருகிறது. ஏன்?

15) 2007இல் நடந்த சரித்திரப் பரிட்சையில் ஒரு மாணவன் 'நாம் 1947இல் சுதந்திரம் அடைந்தோம். சுதந்திரம்  அடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன' என்று எழுதினான். ஆசிரியர் அவன் பதிலுக்கு முழு மார்க் கொடுத்து விட்டார். எப்படி?

விடைகள்
1) அந்த பூதத்தை விட்டே  கிணற்றை வெட்டி முடிக்கச் சொல்வேன்!

2) மார்கழி மாதப் பனி விலகி விடுவதால் போக வேண்டிய வழி கண்ணுக்குத் தெரியுமே!

3) கர்ணனைச் சேர்த்தால் இவர்கள் ஆறு பேர் ஆகி விடுவார்களே! அப்புறம் எப்படி அவர்களைப் பஞ்ச (ஐந்து) பாண்டவர்கள் என்று அழைக்க முடியும்?

4) ஔரங்கசீப் முருகன்!

5) இருவருமே பாச்சிலர்கள்!

6) இரண்டு வேளைக்கு!

7) உ. வே.சா. (அவருக்குத்தானே தமிழ்த்தாத்தா என்று பெயர்?)

8) ஜெயிலர்

9) ராங் நம்பர் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுவேன்!

10) பாலன்ஸ் (தராசு) செய்வார்!

11) மணிவண்னன் 'நூறாவது நாள்' டைரக்டர். பாலசந்தர் 'வெள்ளிவிழா' டைரக்டர் ஆயிற்றே!

12) சூட்  போடுவார்!

13) முட்டாள்கள் தினத்தை நோக்கி!

14) 'பாரதி யார்?' என்று கேட்டால்  கோபம் வராதா?

15) அது சரித்திரப் பரிட்சைதானே? மாணவன் தப்பாகக் கணக்குப் போட்டு விட்டதற்காக மார்க் குறைக்க அது ஒன்றும் கணக்குப் பரிட்சை இல்லையே!