Sunday, April 26, 2026

சிரித்து வாழ வேண்டும் - 2

1.  மனைவி (கணவனிடம்): தீபாவளிக்கு நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்காதது கூடப் பரவாயில்ல. ஒரு சாதாரண நூல் புடவை வாங்கிக் கொடுத்துட்டு, பட்டுன்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு, அடிக்கொரு தடவை 'பட்டு! புடவை நல்லா இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்கறதைத்தான் என்னால சகிச்சுக்க முடியல!

2. "யாராவது முட்டாள்தனமா ஏதாவது சொன்னா, அவங்களோட வாதம் பண்ணக் கூடாது. 'நீங்க சொல்றது சரிதான்'னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். என்ன சொல்றீங்க?'

"நீங்க சொல்றது சரிதான். நான் வரேன்!"

3. "சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற உங்கள் கட்சி இந்தத தேர்தலில் தோற்று விட்டதே?"

"மக்கள் கட்சி மாறி விட்டார்கள்."

4. "நம் தலைவர்தான் தேர்தலில் தோற்று விட்டரே! அப்புறம் ஏன் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறார்?"

"டெபாசிட் கிடைத்தால் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாராம்!"

5.  "உனக்கு லாட்டரியில் ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கிறதாமே!"

"ஆமாம். கஷ்ட காலம்."

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

"லாட்டரியில் பரிசு விழுந்தால் நான் வாங்கிய படனைத் திருப்பிக் கொடுத்து விட்டதாக எல்லாக் கடன்காரர்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது அவர்களுக்கெல்லாம் பணத்தைக் கொடுக்க வேண்டுமே!"

6. "நம் தலைவருக்கு ஓட்டுக் கேட்டு ஒரு சோதிடர் பிரசாரம் செய்கிறாமே?"

"ஆமாம். தலைவர் ஜெயிப்பார் என்று அவர் சொன்ன சோதிடம் பலிக்க வேண்டுமே என்றுதான் அப்படிச் செய்கிறாராம்."

7. நீதிபதி: இதற்கு முன் ஜெயிலுக்குப் போயிருக்கிறாயா?"

"இல்லை ஐயா! ஒரு தடவை கூடப் போனதில்லை."

"கவலைப்படாதே! இப்போதோ போகலாம்."

8. "நேற்று இரவு கனவில் நான் சில்க்கோட டிஸ்கோ ஆடினதிலேந்து என் மனைவி என் மேல ரொம்பக் கோபமா இருக்கா!"

"உன் கனவை உன் மனைவிகிட்ட ஏன் சொன்ன?"

"நாசமாப் போச்சு. கனவு கண்டதே என் மனைவிதான்."

9. அதோ போறாரே, அவர் போன வருஷம் இலவசமா செஞ்சதை இந்த வருஷம் பிசினசா செய்யறாரு."

"என்ன செய்யறாரு?"

"போன வருஷம் தண்ணீர்ப் பந்தல் வச்சிருந்தாரு. இந்த வருஷம் தண்ணி லாரி அடிக்கிறாரு!"

10. "பாடப் புத்தகத்திலே சில்க்கோட படம் வச்சிருந்ததுக்காக பையனை வாத்தியார் பெஞ்ச் மேல நிறுத்திட்டாரு."

"ஒங்க வாத்தியார் ரொம்ப ஸ்ட்ரிக்டோ?"

"இல்ல. அவர் ஜெயமாலினி ரசிகராம்! அதனாலதான்."

11. "ஒரு தயிர்க்காரிசோட கதையைப் படமாக்கப் போறோம்."

"படத்தோட பேர் என்ன?"

"தயிர் உள்ளவரை உஷா"

12. "உயிர் உள்ளவரை உஷா!"

"என் பொண்ணு மேல உனக்கு அவ்வளவு காதலா? அவளை உனக்கே கல்யாணம் செஞ்சு கொடுக்கறேன்."

"அது இல்ல. நான் உஷா ஃபேன் சேல்ஸ்மேன். உஷா ஃபேன் உங்க ஆயுள் முழுக்க உழைக்கும்னு சொல்ல வந்தேன்."

13.  "ஏம்ப்பா, இங்கே ஒரு பிச்சைக்காரன் இருந்தானே, அவன் எங்கே?"

"இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ் வரைக்கும் போயிருக்கான். இப்ப வந்துடுவான்."

14. "இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ் வாசல்ல உக்காந்து பிச்சை எடுத்து தப்பாப் போச்சு!"

"ஏன்?"

"ஒரு வருமான அதிகாரி எனக்கு தினம் எவ்வளவு பிச்சை கிடைக்கறதுங்கறதை கவனிச்சு, வருமான வரி கட்டச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காரு!"

15. இளிச்ச வாயன் எவனாவது கிடைப்பானான்னு தேடிக்கிட்டிராக்காங்க அவங்க."

"எதுக்கு?"

"பற்பசை விளம்பரத்துக்கு ஃபோட்டோ எடுக்கத்தான்!"