Saturday, January 23, 2016

7. வினாடி வினா - விபரீத பதில்!

வினாக்கள்
1) கிணறு வெட்டினால் பூதம் வருகிறது. என்ன செய்வீர்கள்?

2) தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது ஏன்?

3) கர்ணன் தருமனுக்கு மூத்த சகோதரன் என்றாலும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவன் இல்லை. ஏன்?

4) சிவாஜி கணேசன் என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?

5) காமராஜருக்கும் எம்.ஏ. படிக்கும் மாணவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

6) 32 மாத்திரைகளை வேளைக்குப் பாதி வீதம் சாப்பிட்டு வந்தால் எத்தனை வேளைக்கு வரும்?

7) தமிழ் மொழியின் பாட்டன் யார்?

8) தண்டிக்கப்படாமலேயே சிறைச்சாலையில் இருப்பவர் யார்?

9) உங்கள் நண்பருக்கு ஃபோன் போட்டால் லைனில் கடவுள் வருகிறார். என்ன செய்வீர்கள்?

10) சர்க்கஸில் கம்பி மேல் நடப்பவர் சொந்தத் தொழில் செய்ய நினைத்தால் எந்தத் தொழில் செய்வார்?

11) மணிவண்ணனை விட பாலசந்தர் அதிக வெற்றி அடைந்த டைரக்டர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

12) ஒரு வக்கீல் தையற்காரரிடம் தனக்கு சூட் தைக்கச் சொல்லி இருந்தார். தையற்காரர் சரியாகத் தைக்காமல் கெடுத்து விட்டால், வக்கீல் என்ன செய்வார்?

13) மார்ச் மாதத்தில் நாம் எதை நோக்கி மார்ச் செய்கிறோம்?

14) பாரதியார் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வருகிறது. ஏன்?

15) 2007இல் நடந்த சரித்திரப் பரிட்சையில் ஒரு மாணவன் 'நாம் 1947இல் சுதந்திரம் அடைந்தோம். சுதந்திரம்  அடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன' என்று எழுதினான். ஆசிரியர் அவன் பதிலுக்கு முழு மார்க் கொடுத்து விட்டார். எப்படி?

விடைகள்
1) அந்த பூதத்தை விட்டே  கிணற்றை வெட்டி முடிக்கச் சொல்வேன்!

2) மார்கழி மாதப் பனி விலகி விடுவதால் போக வேண்டிய வழி கண்ணுக்குத் தெரியுமே!

3) கர்ணனைச் சேர்த்தால் இவர்கள் ஆறு பேர் ஆகி விடுவார்களே! அப்புறம் எப்படி அவர்களைப் பஞ்ச (ஐந்து) பாண்டவர்கள் என்று அழைக்க முடியும்?

4) ஔரங்கசீப் முருகன்!

5) இருவருமே பாச்சிலர்கள்!

6) இரண்டு வேளைக்கு!

7) உ. வே.சா. (அவருக்குத்தானே தமிழ்த்தாத்தா என்று பெயர்?)

8) ஜெயிலர்

9) ராங் நம்பர் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுவேன்!

10) பாலன்ஸ் (தராசு) செய்வார்!

11) மணிவண்னன் 'நூறாவது நாள்' டைரக்டர். பாலசந்தர் 'வெள்ளிவிழா' டைரக்டர் ஆயிற்றே!

12) சூட்  போடுவார்!

13) முட்டாள்கள் தினத்தை நோக்கி!

14) 'பாரதி யார்?' என்று கேட்டால்  கோபம் வராதா?

15) அது சரித்திரப் பரிட்சைதானே? மாணவன் தப்பாகக் கணக்குப் போட்டு விட்டதற்காக மார்க் குறைக்க அது ஒன்றும் கணக்குப் பரிட்சை இல்லையே!

No comments:

Post a Comment