Thursday, October 25, 2012

5. பந்த் - சில குறிப்புகள்


'பந்த்'  என்ற 'தூய' தமிழ்ச் சொல்லைப் பற்றித் தமிழ் நாட்டு அரசியலுக்குப் பழக்கப் படாதவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினர் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்தக்  குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பந்த் என்றால் கதவடைப்பு அல்லது வேலை நிறுத்தம் என்று பொருள். இந்தியை எதிர்த்த (எதிர்க்கும்)  அரசியல் தலைவர்களும் முழுமனதோடும், ஒருமனதோடும் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக்கொண்ட இந்தி வார்த்தை இது.

'பந்து'க்கு யார் வேண்டுமானாலும் அழைப்பு விடலாம். அழைப்பு விடும் நபருக்கு அல்லது அவரது அமைப்புக்கு ஓரளவு ஆள் பலமும், கத்தி, கம்பு, அமில பாட்டில், கற்கள் போன்ற சில 'அமைதிப் படை ஆயுதங்களும்' இருக்க வேண்டியது அவசியம்.

சில சமயம், மாநில அரசும் 'பந்து'க்கு அழைப்பு விடும். அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உண்டு. அரசு பஸ்கள் ஓடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. அரசு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டாட்டம். மற்றவர்களுக்கெல்லாம் திண்டாட்டம்!

வருடத்துக்கு இரண்டு 'பந்த்'களாவது நடத்துவது அரசியல் கட்சிகளுக்கு ஒரு உற்சாக டானிக்.

விடுமுறையை ஒட்டி 'பந்த்' வந்தால் மக்களுக்குத் திண்டாட்டம் அதிகம் என்பதால், மக்களிடம் 'அக்கறை' கொண்ட கட்சிகள் பெரும்பாலும் விடுமுறை நாளை ஒட்டியே 'பந்த்' நடத்த விழைவார்கள்.

'பந்த்' எந்தக் காரணத்துக்காகவும் நடத்தப்படலாம். ஊழல் முதல்வர் பதவி விலக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆதரித்து அல்லது எதிர்த்து, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெயர் தெரியாத ஒரு நாட்டில் ஒரு தமிழன்  ஏதோ ஒரு காரணத்துக்காகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து..இதுபோல் எத்தனையோ காரணங்களுக்காக.

எந்த நோக்கத்துக்காக 'பந்த்' நடத்தப்பட்டாலும், 'பந்த்' முடிந்தவுடன் அந்த நோக்கத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. உதாரணம்: இலங்கைத் தமிழர் பிரச்னை, காவிரி நீர் பிரச்னை, இட ஒதுக்கீடு முதலியன.

'பந்த்' என்றால் முழு 'பந்த்' இல்லை. சில தொழில்/வியாபார அமைப்புகளுக்கு விலக்கு உண்டு - காரணமாகத்தான்!
மின் வாரியத்துக்கு விலக்கு உண்டு - வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மின் விசிறிக்காற்றும், தலைவர்களுக்கு ஏசியும் அவசியம் என்பதால்.
பால் விற்பனை நிறுவனத்துக்கு விலக்கு உண்டு - காப்பி சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?
கேபிள் டிவி நடதுபவர்களுக்கும் விலக்கு உண்டு - வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்திருபவர்களுக்குப் பொழுது போக்கு அவசியம் ஆயிற்றே?
ஆஸ்பத்திரிகளுக்கும் விலக்கு உண்டு - 'பந்தி'ன் போது நடக்கும்  வன்முறையில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக!

'பந்தி'னால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலிகள், காய்கறி வியாபரிகள், பயணம் மேற்கொள்வோர் முதலியோர். பயன் பெறுபவ்ர்களும் உண்டு. ரொட்டி, பிஸ்கட் விற்பவர்களுக்கு 'பந்து'க்கு முதல் நாள் நல்ல வியாபாரம் நடக்கும்.

* 'பந்த்' நடந்து முடிந்த பிறகு, அது வெற்றியா, தோல்வியா என்பது பற்றிப் பல்வேறு கட்சி சார்புள்ள ஊடகங்களின் துணையுடன், மக்கள் பட்டி மண்டபம் நடத்துவார்கள். இதனால் மக்களின் சிந்தனைத் திறனும், பகுத்து ஆயும் திறமையும், பேச்சாற்றலும் வளர்கின்றன.

*மத்திய அரசுக்கு எதிராக 'பந்த்' அறிவிக்கப்பட்டால், 'பந்து'க்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே 'பந்தி'னால் ஏற்படும் பொருளாதார இழப்பைப் பற்றியும், பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களைப் பற்றியும் அரசின் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் உபதேசங்கள் செய்யப்படும். பத்திரிகைகளிலும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படும் -'பந்தி'னால் ஏற்படக்கூடிய இழப்பை விட இந்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைக்க வைக்கும் அளவுக்கு!

'பந்த்' நடந்து முடிந்ததும், 'பந்த்' படுதோல்வி அடைந்தது, 'பந்தி'னால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை, பஸ்கள் ஓடின, கடைகள் திறந்திருந்தன என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு இதற்கு ஆதாரமாக வீடியோக்கள் காட்டப்படும். இந்த வீடியோக்கள் என்றைக்கு எடுக்கப்பட்டவை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

'பந்த்' மாநில அரசுக்கு எதிராக இருந்து, மத்தியில் ஆளும் கட்சியின் ஆதரவும் பெற்றிருந்தால், பொருளாதார இழப்புகள் பற்றி டிவியும் ரேடியோவும் பேச மட்டா. 'பந்து'க்கு நல்ல ஆதரவு இருந்தது என்று செய்தி வெளியிடப்பட்டு வீடியோ ஆதாரங்கள் காட்டப்படும்!

'பந்து'க்கு முன் தினமே எதிர்க்கட்சி 'குண்டர்கள்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவர். 'பந்த்' அன்று ஆளும் கட்சித் 'தொண்டர்கள்' ஆயுதங்களுடன் 'அமைதியாக' நடமாடி 'பந்தை' முறியடிக்க அனுமதிக்கப்படுவர்.

'பந்தை' முறியடிக்கச் சுலபமான வழிகள் இரண்டு உண்டு.  ஒன்று, எதிர்க்கட்சிகள் 'பந்த்' அறிவித்தால், ஆளும் கட்சி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அந்த அறிவிப்பை முழுமையாக அலட்சியம் செய்து,  தான் பாட்டுக்கு இயங்குவது. 'பந்த்' பிசுபிசுத்துப் போகும்படி செய்ய இது ஒரு எளிய வழி. இரண்டாவது, எதிர்க்கட்சிகள் எந்தக் காரணத்துக்காக 'பந்த்' நடத்துகிறார்களோ, அதற்கு எதிரான காரணத்துக்காக ஆளும் கட்சியும் அதே நாளில் 'பந்த்' நடத்துவது. உதாரணமாக, ஒரு மாநில முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி கொடுத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதனால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் 'பந்த்' நடத்தினால், முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி கொடுத்ததை எதிர்த்து ஆளும் கட்சி அதே நாளில் 'பந்த்' நடத்தலாம். 'பந்த்' முழு வெற்றி அடையும். நாங்கள் நடத்திய 'பந்த்' முழு வெற்றி அடைந்ததாக இரண்டு தரப்புமே சொல்லிக் கொள்லலாம். ஆனாலும் இது உண்மையான வெற்றி அல்ல என்று அவர்களுக்குத் தெரியுமாதலால், 'பந்த்' நடத்திய திருப்தி அவர்களுக்கு இருக்காது. எனவே எதிர்காலத்தில் இன்னொரு 'பந்த்' அறிவிக்க அவர்கள் யோசனை செய்வார்கள்.

இந்த இரண்டு வழிகளில் ஒன்றைக்கூட இதுவரை யாரும் முயற்சி செய்து பார்த்ததாகத் தெரியவில்லை!

No comments:

Post a Comment